அப்துல் கலாமும் இந்திய இளைஞர்களும்

இவ்வுலகத்தில் இந்தியா ஒரு விசித்திரமான நாடு. இது பல மூடர்களை ஈன்றாலும் சில அறிவாற்றலின் மேதைகளும் அங்கே பிறந்தார்கள்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சண்டை மூண்டால், அதை விளையாட்டாக  எடுப்பதுவும், அதுவே கிரிக்கெட் போட்டி என்றால் அதை ஆக்ரோஷமாக சண்டையாக எடுப்பதுவும்  இந்தியர்களுக்கு கை வந்த கலை.

 

இவர்கள் ஒன்றில் ஈடுபட்டால் அதில் மும்முரமாக  இருப்பார்கள். ஆனால் அடுத்த நிமிடமே அடுத்த பிரச்சனையில் மூக்கை நுழைத்து அச்செயலுக்கும் கவலைப்படுவார்கள் .

இவர்களை மாற்ற இந்தியாவுக்கு கிடைத்த ஒரு பொன் மகன்(தமிழ்மகன்) Dr.அப்துல் கலாம்.  இந்திய இளைஞர்களுக்கு ஒரு முன் மாதிரியாக திகழ்பவர். இந்திய இளைஞர்களை ஒரே வார்த்தையில் மாற்றியவர் .
“இளைஞர்களே கனவு காணுங்கள்” என்ற ஒரே வார்த்தையாலேயே இந்தியாவையே மாற்றியமைத்தவர்.

அப்துல் கலாமின் சுயசரிதையில் (அக்கினிச் சிறகுகள்) அவர் தான் பட்ட கஷ்டங்களையும் தன் மதத்தின்(இஸ்லாம்) மீதான சிறந்த நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். அதில் அவர் வெளிப்படையாக தன் மதத்துக்கும் விண்வெளி ஆராய்ச்சிக்கும் இருந்த வேறுபாட்டினையும் தனது நிலைமைகளையும் வெளிப்படுத்தினார். ஒரு சிறந்த ஒழுக்கப் பற்றுள்ள முஸ்ஸிம் குடும்பத்தில் இருந்து வந்த தன்னால் முதலில் இரண்டையும் ஒன்றாய் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனவும் பின்னாளில் தன்னால் இரண்டையும் உணர முடிந்ததாகவும் கூறினார்.

இந்திய அணு ஆராய்ச்சியில் வெற்றியும், இந்தியாவிலேயே இருந்து “இந்தியா வல்லரசு ஆகும்” எனச் சொன்ன ஒரே ஒரு மனிதர் அப்துல் கலாம் மட்டுமே. இதனாலேயே பின்னாளில் இளைஞர்களின் மனதையும் வெல்ல முடிந்தது.

ஒட்டு மொத்த இந்திய சமுதாயத்தின் ஆதரவே அவரை இந்திய குடியரசுத் தலைவராக மாற்றியது . இவ்வாதரவு அவரின் அறிவாற்றலுக்கும் திறமைக்கும் கிடைத்த ஓர்  வெகுமதியே.

முதலும் இறுதியுமாய் இந்திய வரலாற்றில் முதல் முறையாய் குடியரசு மாளிகையை விட்டு வரும் போது தன்னுடைய இரு பெட்டிகளை மட்டுமே திரும்பிக் கொண்டு வந்தார். இது ஒன்றே போதும் அச்சிறந்த மனிதனைப் பற்றிச் சொல்ல …

“இளைஞர்களே கனவு காணுங்கள்”
அப்துல் கலாமின் கனவு மெய்ப்பட வேண்டும் …